சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாண்டி பஜாரில், நடைபாதை வணிகர்களுக்கான வளாகம் அமைக்கப்பட்டது. இந்த வளாகத்தை பயன்படுத்தி, கூட்ட நெரிசல் இல்லாமலும், நடைபாதையில் இடையூறு இல்லாமலும் மக்கள் கடைகளில் பொருட்களை வாங்கிச் செல்லலாம்.
மேலும், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பாண்டி பஜார் மற்றும் சுற்றியுள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்கள், தங்கள் வாகனங்களை நிறுத்த ஏதுவாக, ரூ.40.79 கோடியில் பல அடுக்கு தள தானியங்கி வாகன நிறுத்துமிடம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
1,522 ச.மீ பரப்பளவில் 3 தளங்களாக அமைக்கப்பட்டுள்ள இத்தானியங்கி அடுக்கு, 513 இரு சக்கர வாகனங்களும், 222 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது அமைந்துள்ள கட்டிடத்தின் பெரும்பகுதிக்கு, சூரிய ஒளி மின்தகடு மூலமாகவே மின் விநியோகம் செய்யப்படுகிறது. அதோடு, ஓட்டுநர் தங்கும் அறை, கழிவறை, தாய்ப்பால் ஊட்டும் அறை உள்ளிட்ட சிறப்பம்சங்கள் கொண்டவையாக, இந்த தானியங்கி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
பாண்டி பஜாரில் பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம்! இந்த நிறுத்தத்தில், நான்கு சக்கர வாகனம் ஒன்றை ஒரு மணி நேரம் நிறுத்துவதற்கு 20 ரூபாயும், இரு சக்கர வாகனத்திற்கு 5 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ள இந்த பல அடுக்கு நிறுத்தத்தில், திறப்பு விழா சிறப்பு சலுகையாக அன்றும், சனிக்கிழமையும் இலவசமாக வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடங்கள் திறப்பு!