இதுதொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், மாநில நெடுஞ்சாலைத்துறை ஏப்ரல் முதல் ஜூலை 2020 வரை கிட்டத்தட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கரானா தொற்றுப் பரவலுக்கு இடையில் அவசர அவசரமாக ஒப்பந்தங்கள் கோரியுள்ளனர். இதில் பெரும்பாலானவை தேவையில்லாதவை.
அறப்போர் இயக்கம் இது குறித்து நிதித் துறை செயலாளருக்கும், மாநில நெடுஞ்சாலை செயலாளருக்கும் புகார் அனுப்பியுள்ளது. நம் மாநில அரசின் வரி வருவாய் குறையும் சூழ்நிலையில் கரோனா தாக்கத்தினாலும் செலவினங்களில் முன்னுரிமை எதற்கு தரப்பட வேண்டும் என்ற ரங்கராஜன் குழு பரிந்துரைகள் வருவதற்கு முன்பே, அவசரமாக நெடுஞ்சாலை துறையில் ரூபாய் 12 ஆயிரம் கோடி ஒப்பந்தங்களை முடிவு செய்வது கண்டிக்கத்தக்கது.
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒதுக்கப்பட்ட ரூபாய் 4,500 கோடி ஒட்டுமொத்த சாலை வளர்ச்சித் திட்டம், இன்னும் பெரும்பாலும் செயல்படுத்தாத சூழ்நிலையில், இந்த திட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு 5,500 கோடி ஒப்பந்தங்கள் அவசரமாக மே மாதமே வெளியிட்டுள்ளார்கள்.