தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேட்டையாடப்பட்ட தமிழர்களுக்கு வீட்டில் இருந்தே வீர வணக்கம் செலுத்துவோம்!

சென்னை: மே 17ஆம் நாள், முள்ளிவாய்க்காலில் வேட்டை ஆடப்பட்ட தமிழ் இனக் கொழுந்துகளுக்கு வீட்டில் இருந்தே வீர வணக்கம் செலுத்துவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

vaiko statement
vaiko statement

By

Published : May 13, 2021, 12:27 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் எழுந்த, தணிப்பரிய தாகமாம் தமிழ் ஈழத் தாயகம் என்கின்ற வேட்கையை வீழ்த்தி, வல்லரசு நாடுகள் சேர்ந்து, துடைத்து அழித்த முள்ளிவாய்க்கால், நம் நெஞ்சங்களில் ஆறாத வடுவாக இருக்கின்றது.

தமிழ் ஈழத்தில், முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு யாரும் வரக்கூடாது; புகழ் வணக்கம் செலுத்தக் கூடாது என்று கருதுகின்ற சிங்களப் பேரினவாத அரசு அடக்குமுறையை மேற்கொண்டு இருக்கின்றது. வல்லாதிக்கத்தின் கோரக் காவலர்களை அங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நிறுவிடக் கொண்டு வரப்பட்ட நினைவுக் கல்லை, இரவோடு இரவாக அகற்றிக் கொண்டு போய்விட்டனர்.

ஏற்கனவே இருந்த நினைவுத் தூணையும் இடித்து நொறுக்கி உள்ளனர். யாரையும் உள்ளே நுழைய விடாமல், மறித்து நிற்கின்றார்கள். அடக்குமுறையால் இன உணர்வை ஒடுக்கி விட முனையும் சிங்களப் பேரினவாத அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சில மாதங்களுக்கு முன்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நினைவுத் தூணை உடைத்தார்கள். உலக நாடுகள் கண்டனத்திற்குப் பின்னர் அது மீண்டும் கட்டப்பட்டது. அதேபோல, இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசுக்கு, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறைகளைக் கைவிட வலியுறுத்த வேண்டும்.

ஐ.நா. மன்றம் அமைத்த குழு அளித்த அறிக்கையின்படி, முள்ளிவாய்க்காலில் மட்டும் 1.37 லட்சம் தமிழர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இன்று அவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்கவும் தடை விதிக்கின்றார்கள்.

மே 17ஆம் நாள், முள்ளிவாய்க்காலில் வேட்டை ஆடப்பட்ட தமிழ் இனக் கொழுந்துகளின் நினைவுகளை நமது நெஞ்சில் ஏந்துவோம். வழக்கமாக தாயகத்தில் கூடுவோம்; கரோனா முடக்கம் காரணமாக, இந்த ஆண்டு அதற்கு வாய்ப்பு இல்லை; எனவே, நமது இல்லங்களில் இருந்தே, வீரவணக்கம் செலுத்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'ஏழு தமிழர்களை விடுதலை செய்க' - முதலமைச்சருக்கு வைகோ வேண்டுகோள்

ABOUT THE AUTHOR

...view details