சென்னை: இலங்கை அரசால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தூண் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண். இலங்கை அரசால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களை நினைவுகூரும் வகையில் இந்தத் தூண் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று (ஜனவரி 8) இரவு இந்தத் தூண் தகர்க்கப்பட்டதால், பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் இச்செயலுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி அறிக்கை
ஈழப்பேரழிவைச் சந்தித்து ஆறா ரணத்தையும், கொடும் பேரிழப்பையும் சந்தித்து நிற்கும் தமிழர்களைச் சீண்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு இனத்தைப் பேரழிவுக்குள் தள்ளி, இரண்டு இலட்சம் தமிழர்களைத் துள்ள துடிக்கப் படுகொலை செய்து, தமிழர்களின் வீட்டையும், நாட்டையும் அழித்து, நிலங்களை அபகரித்து, தமிழ்ப்பெண்களைச் சூறையாடி, தமிழர்களை அடையாளமற்று அழித்து முடித்து, மொத்த நாட்டையும் தங்களுடையதாக மாற்றிக் கொண்டுவிட்ட பிறகும், தமிழர்கள் மீதான வன்மமும், ஆத்திரமும் துளியளவும் சிங்களப்பேரினவாதிகளுக்குக் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசிக திருமாவளவன் ட்வீட்
அதில், “யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ளனர். சிங்கள இனவெறிப் படையினரின் இந்தச் இழிசெயலை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் #சிங்கள_ஆதிக்கத்தைத் தகர்ப்போம். தமிழர் அடையாளம் காப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.