சென்னையில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத எலக்ட்ரானிக்ஸ் பூங்கா ரிச்சி தெரு. இங்கு அனைத்து வகை எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மலிவு விலையில் கிடைக்கும். அந்த வகையில் உணவையும் மலிவு விலையில் கொடுத்து அசத்திவருகிறார் முகேஷ் குப்சிந்தானி.
கடந்த 48 ஆண்டுகளாக சென்னையில் வசித்துவரும் முகேஷ், டெல்லியை பூர்விகமாகக் கொண்டவர். மதுரையில் 10 ரூபாய்க்கு உணவளித்து பிரபலமான ராமு தாத்தா இறந்த செய்தி, முகேஷை வெகுவாகப் பாதித்துள்ளது.
இதையடுத்து, சாதாரண ஒருவரால் இது சாத்தியம் என்னும்போது, ஏன் நம்மால் முடியாது என்று முகேஷ் எண்ணியதே, சென்னையிலும் 10 ரூபாய் உணவை சாத்தியப்பட வைத்துள்ளது.
முதல் நாளில் 100 பேருக்கு சாப்பாடு வழங்கிய முகேஷ், அதையடுத்து பெருகிய ஆதரவால் 300, 400 என 10 ரூபாய் உணவு வழங்குதலை கூட்டியுள்ளார். திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சோறு, குழம்பு, பொறியல், ரசம், மோர் அடங்கிய உணவும், புதன்கிழமை சாம்பார் சோறு, சனிக்கிழமை காய்கறி உணவும் கொடுத்துவருகிறார்.