தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக "வளர் 4.0" வலைதளம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக "வளர் 4.0" என்ற வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.

By

Published : Jun 15, 2022, 7:45 PM IST

MSME technology new valar 4 website open
MSME

சென்னை: தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்ட வளர் 4.0 (Valar 4.0) வலைதளத்தை, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு முதன்மைச் செயலர் நீரஜ் மித்தல், சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசுசெயலாளர் வி.அருண் ராப், மின்னாளுமை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஜயேந்திர பாண்டியன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தலைமை தொழில்நுட்ப அலுவலர் ராபர்ட் ஜெரார்ட் ரவி, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் வி.காமகோடி மற்றும் அரசு அலுவலர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தேசிய அளவிலான உயர்திறன் மையங்கள் மற்றும் தொழில் முனைவோர்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களைக் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது.

இதில், சிறு,குறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு மிக அதிகமாகவுள்ளது. மாநிலத்தில் சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் திறனை மேம்படுத்தவும், உற்பத்தியைப் பெருக்கவும், நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், கருத்துகளைப் பரிமாறவும், பிரச்னைகள் மற்றும் சவால்களுக்குத் தீர்வு காணவும், முதலமைச்சர் ஸ்டாலினின் '2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு முதலமைச்சரின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்' என்ற இலக்கை அடையவும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின்கீழ் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வளர் 4.0 வலைதளத்தை உருவாகியுள்ளது.

இந்த வலைதளத்தில், சிறு,குறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு தகவல் தொழில் நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் விவரங்கள் மற்றும் திட்டங்கள் சம்பந்தமான தகவல்கள் கிடைக்கும். இவ்வலைதளத்தில் வழங்குநர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், உணவு பதப்படுத்துதல், மென்பொருள், வன்பொருள் மற்றும் பொருட்களின் தொகுப்புத் தேவைகள் (Packaging Requirements)போன்ற பல்வேறு பிரச்னைகள், சிக்கல்கள் மற்றும் சவால்களுக்குப் யோசனைகள் மற்றும் தீர்வுகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் வரை 242 நிறுவனங்கள் ’வளர் 4.0 வலைதளத்தில்’ பதிவு செய்துள்ளனர். 29 நகரங்களிலிருந்து 122 பயனர்கள் தங்களின் பெயர், நிறுவனங்களின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ளும் விவரங்களைப் பதிவு செய்துள்ளனர். 279 சேவைகள், 20 திட்டங்கள் மற்றும் 389 நிபுணர்களின் விவரங்கள் வலைதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வலைத்தளத்தைத் தமிழ்நாடு மின்னாளுமை முகமை, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IITM)துணையுடன் வடிவமைத்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:லஞ்சத்தினால் காவல்துறையை கட்டுப்படுத்தலாம் - ஐ.லியோனி பேச்சால் சர்ச்சை

ABOUT THE AUTHOR

...view details