முன்னாள் அதிமுக எம்பி குழந்தைவேலுவின் மனைவி ரத்தினம்(63), சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது மகன் பிரவீண்(35) வீட்டிற்கு கடந்த மார்ச் மாதம் சென்றுள்ளார்.
பின்னர் சொத்துப்பிரச்சனை காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 4ஆம் தேதி மகன் பிரவீணுக்கும், தாய் ரத்தினத்திற்கும் திரும்பவும் தகராறு ஏற்பட இதில் ஆத்திரமடைந்த பிரவீண், ரத்தினத்தை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கையில், பிரவீணுக்கு உதவி செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சத்யஜோதி, அவரது மனைவி ராணி ஆகிய இருவரையும் கடந்த மே மாதம் 9ஆம் தேதி, காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த மூன்று மாதமாக தலைமறைவாக இருந்த மகன் பிரவீண், டெல்லியில் இருப்பதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து டெல்லி விரைந்த தமிழக தனிப்படை போலீசார் நேற்று மதியம் அவரை கைது செய்துள்ளனர்.