சென்னை:சைதாப்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் செல்வம். இவர் அதே பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். கடந்த 6ஆம் தேதி அவரது கடையை பூட்டிவிட்டுச் சென்று மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்துள்ளார்.
அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 2 கேமராக்கள் திருடு போயிருந்தன. இது குறித்து செல்வம் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அருண் குமார் என்ற பிங்கி, சந்துரு, வினோத் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இவர்களை பிடிக்க காவல் துறையினர் சினிமா பாணியில் நடத்திய நாடக சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 6 மாதங்களாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூவரும் சிசிடிவி கேமராவில் சிக்கி வந்த போதிலும், கையில் சிக்காமல் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததால் காவல் துறையினருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
இதனால் காவல் துறையினர் அவர்களது கும்பலில் ஊர்காவல்படையை சேர்ந்த ஒருவரை இணைத்துள்ளனர். பிறகு இந்த கும்பல் கொள்ளையடிக்க நோட்டமிடுவதில் தொடங்கி, கொள்ளையடிக்க பயன்படுத்தும் பாணி வரை ரகசியமாக காவல் துறையினருக்கு ஊர்காவல்படை காவலர் தெரியப்படுத்தி வந்துள்ளார்.
இது தெரியாமல் அவருடன் சேர்ந்து மூன்று பேரும் கொள்ளையில் ஈடுபடும் போது கையும் களவுமாக காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த 6 மாதங்களாக கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறிய கடையின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.