சென்னை:புழல் காவாங்கரை சேர்ந்தவர் யாஸ்மின் (28) கடந்த 27ஆம் தேதி மதியம் புளியந்தோப்பு ஆடு தொட்டி அருகே ஆட்டோவில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வழிமறித்து இவரது பணப்பையைப் பறித்துச் சென்றதாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் யாஸ்மினிடம் நடத்திய விசாரணையில் 11 ஆண்டுகளுக்கு முன்பு யாஷ்மினுக்கும் திருமணம் நடந்து 10 வயதில் ஒரு மகள் உள்ளார். யாஸ்மின் 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கணவர் மோகன் பிரிந்து சென்றுவிட்டார்.
மன வேதனையும்... குழந்தை விற்பனையும்...
பின்னர் பணப்பற்றாக்குறை காரணமாகக் கருக்கலைப்பு செய்ய எண்ணினார். யாஸ்மின் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு எல்லீஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் செல்லும்போது எண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஜெயகீதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது யாஸ்மின் கருக்கலைப்பு குறித்து ஜெயகீதாவிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
அதற்கு ஜெயகீதா குழந்தையைப் பெற்று குழந்தை இல்லாதவர்களுக்குக் கொடுத்தால் அதிகப் பணம் கிடைக்கும் என்று கூறியதால் யாஸ்மினும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஸ்மினுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அதன்பின் கடந்த 25ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன யாஸ்மின் ஜெயகீதா கூறியதன்பேரில் குழந்தையுடன் புரசைவாக்கத்திற்கு வந்தார். அங்குக் காத்திருந்த ஜெயகீதா, தனது நண்பர் தனம் அழைத்து வந்த தம்பதியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு 3.5 லட்ச ரூபாயை யாஸ்மினிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர். பணத்தை வாங்கிக்கொண்டு யாஸ்மின் புரசைவாக்கத்திலிருந்து ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றார்.
நண்பர்களுடன் குழந்தை விற்பனை
பின்னர் புளியந்தோப்பு ஆடு தொட்டி அருகே ஆட்டோவில் சென்றபோது அடையாளம் தெரியாத சிலர் ஆட்டோ ஓட்டுநரிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக யாஸ்மின் தெரிவித்திருந்தார். இதனையடுத்து காவல் துறையினர் ஜெயகீதாவிடம் நடத்திய விசாரணையில் தனது நண்பர்களான தனம், லதா, ஆரோக்கியமேரி, ஆகியோருடன் சேர்ந்து குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தையை வாங்கி விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.