சென்னை:இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் (நவம்பர் 27) மதியம் தனது மகளுடன் ஆட்டோவில் புளியந்தோப்பு ஆடுதொட்டி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் முகவரி கேட்பதுபோல் பணப்பையைப் பறித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து இரவு வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது மதியம் நடந்த வழிப்பறி சம்பவத்திற்குக் காலதாமதமாக இரவு நேரத்தில் வந்து புகார் அளித்தது காவல் துறையினருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல் துறையினர் புகார் அளித்த அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
மன வேதனையும்... குழந்தை விற்பனையும்...
சென்னை புழல், காவாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் யாஸ்மின் (28). இவருக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 10 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் இவர் இரண்டாவதாக ஐந்து மாத கர்ப்பமாக இருந்தபோது, அவரது கணவர் மோகன் அவரைப் பிரிந்து சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த யாஸ்மின் ஒரு குழந்தையையே வளர்க்க முடியாமல் சிரமப்படுவதால், அந்தக் குழந்தையைக் கலைக்க முற்பட்டுள்ளார். மேலும் யாஸ்மினுக்கு மூச்சுக்கோளாறு பிரச்சினை இருந்துவந்ததால், சிகிச்சைக்காக எல்லீஸ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார்.
அங்கு குழந்தையை விற்கும் இடைத்தரகரான எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயகீதா (49) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் குழந்தையைக் கலைக்க ஆலோசனை கேட்டபோது, குழந்தையைக் கலைக்காமல் பெற்று அதனை அதிக விலைக்கு விற்க ஏற்பாடு செய்துதருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 21ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் யாஸ்மினுக்கு ஆண் குழந்தை பிறந்து 25ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இதையடுத்து ஜெயகீதா கைக்குழந்தையுடன் புரசைவாக்கம் பகுதிக்கு வரக் கூறியதால் யாஸ்மின் நேற்று முன்தினம் மதியம் வந்துள்ளார்.
அப்போது ஜெயகீதாவின் நண்பரான தனம், அவருடன் வந்த இரு நபர்கள் வெற்று முத்திரைத் தாளில் யாஸ்மினிடம் கையொப்பம் வாங்கிவிட்டு உறையில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அளித்துவிட்டு குழந்தையைப் பெற்றுச் சென்றுள்ளனர்.