சென்னை:பி.இ., பி.டெக்., படிப்பில் இந்தாண்டிற்கான முதற்சுற்று கலந்தாய்வில் சென்னையை சேர்ந்த ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், மொத்தம் உள்ள 487 இடங்களில், 428 இடங்கள் முதல் சுற்று கலந்தாய்வில் நிரம்பியுள்ளன. முதல் சுற்று கலந்தாய்வில் ஒட்டுமொத்தமாக இடங்களை தேர்வு செய்த மாணவர்களில் தனியார் கல்லூரிகளில் 87.89 % இடங்கள் முதல் சுற்று கலந்தாய்வில் நிரம்பியுள்ளது.
பொறியியல் கலந்தாய்வில் வழக்கமாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கக்கூடிய கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் எம்.ஐ.டி கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட நான்கு வளாக கல்லூரிகளில் உள்ள இடங்கள் முழுமையாக நிரம்பும். ஆனால், இந்த முறை அப்படி 100 % இடங்கள் நிரம்பவில்லை. இதற்கு எதிராக சென்னை மற்றும் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளை அதிக அளவில் மாணவர்கள் தேர்வு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 446 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1.5 லட்சம் இடங்களை நிரப்ப, கலந்தாய்வு தொடங்கியுள்ளது. 446 கல்லூரிகள் இருந்தாலும், முதல் 50 கல்லூரிகளில் சேர்வதற்குத்தான் மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். உள்கட்டமைப்பு வசதி தரமான கல்வி, படித்து முடித்தவுடன் வேலை வாய்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் போது, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கக்கூடிய கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரி உள்ளிட்ட நான்கு கல்லூரிகளுக்கு மாணவர்களிடம் வரவேற்பு இருக்கும். முதல் சுற்று கலந்தாய்விலேயே இந்த நான்கு கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரம்பிவிடும். அதன் பிறகு, அதிக முன்னணி தனியார் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வர்.
ஆனால், இந்த ஆண்டு அந்த நிலை மாறியுள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. 14 ஆயிரத்து 524 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றதில், 10,340 மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. முதல் சுற்று கலந்தாய்வில், அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் மொத்தமுள்ள 2264 இடங்களில், 1521 இடங்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக, கிண்டி பொறியியல் கல்லூரியில் உள்ள இடங்களில் 86.82 விழுக்காடு இடங்களும், எம்.ஐ.டி கல்லூரியில் 85.58 விழுக்காடு இடங்களும் நிரம்பியுள்ளன.