சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஏழு ஆண்டுகளில் விதி மீறல்களின் காரணமாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு (DCC) 607 ஜவுளி, சாயமிடுதல் தொழிற்சாலைகளை அப்புறப்படுத்தியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காவேரி மற்றும் நொய்யல் ஆற்றில் சாயமிடுதல் தொழிற்சாலைக் கழிவுகளை வெளியேற்றுவது தொடர்பாக 2021-2022 வரை நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் புகார் அல்லது பிரதிநிதித்துவம் வந்துள்ளதா எனவும் சுற்றுச்சூழல் விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறியதற்காக ஜவுளி, சாயமிடுதல் தொழிற்சாலைகள் மீது எத்தனை கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் நாமக்கல் மக்களவை உறுப்பினர் எ.கே.பி சின்ராஜ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் சார்பில் பதில் கூறும்போது, 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறைகளில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் ஜவுளி, சாயமிடுதல் தொழிற்சாலைகளுக்கு எதிராக தொழில் வாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மத்திய அமைச்சகம் பெற்றுள்ளது.