ஊரடங்கு மீறல்: 18 கோடி ரூபாய்க்கு மேல் கல்லாக் கட்டிய காவல்துறை - அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறை
சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறியதாகத் தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் அபராதமாக 18 கோடியே 30 லட்சத்து 58 ஆயிரத்து 491 ரூபாய் வசூலித்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
![ஊரடங்கு மீறல்: 18 கோடி ரூபாய்க்கு மேல் கல்லாக் கட்டிய காவல்துறை அபராத வசூலிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:02:01:1595064721-tn-che-02-caselist-script-7202290-18072020142417-1807f-1595062457-23.jpg)
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து, தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. காவலர்கள் தடை உத்தரவை மீறும் பொது மக்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 116 நாட்களில், தமிழ்நாடு காவல்துறை தடையை மீறியதாக, 8 லட்சத்து 68 ஆயிரத்து 889 பேரை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது.
மேலும் 6 லட்சத்து 40 ஆயிரத்து 145 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 18 கோடியே 30 லட்சத்து 58 ஆயிரத்து 491 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.