கரோனா பாதிப்புக்குப்பின் சென்னை மெட்ரோ ரயில் 45 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. 19 சுரங்க வழிப்பாதைகள் மற்றும் 13 உயர் நிலைப்பாதைகள் வழியாக மெட்ரோ ரயில் பயணிக்கிறது. மெட்ரோ ரயில் நிலைய வளாகம், சுற்றுப்புறம், ரயில் பெட்டி, உயர் மட்ட பாதை மற்றும் சுரங்க வழிப்பாதை என அனைத்தும் மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையிலேயே கட்டப்பட்டுள்ளன. இருப்பினும், எதிர்பாராத இயற்கை சீற்றங்களையும் எதிர்கொள்ளும் வகையில், கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :
- வானிலை நிலவரங்கள் குறித்து உடனுக்குடன் வானிலை மையத்திடம் தகவல் பெறப்பட்டு, அதற்கு ஏற்ப செயல்பட மெட்ரோ நிர்வாக செயலாக்க கட்டுப்பாட்டு மையத்தில், சிறப்பு கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
- புயல் காலங்களில் காற்றின் வேகத்தை துல்லியமாக அளந்து தகவல் தரும் அனிமோமீட்டர் (Anemometer) எனும் கருவிகள், கட்டுப்பாட்டு மையம், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் உட்பட முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் காற்றின் வேகம் அளக்கப்பட்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- மெட்ரோ ரயிலின் ஓட்டம் தரையில் இருந்து 15 முதல் 24 மீட்டர் உயரத்தில் உள்ளதால், புயல் காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- புயல் காலங்களில் செயல்படுவதற்கு ஏற்ப ஓட்டுநர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். புயலின் வேகம் 70 கி.மீ. எனில், ரயிலின் வேகம் 40 கி.மீ. என்றும், புயலின் வேகம் 90 கி.மீ. தாண்டும் போது, ரயிலின் இயக்கம் நிலைமை சரியாகும் வரை நிறுத்தப்படும்.