சீனாவில் வூஹான் எனும் சிறிய மாகாணத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று ஒட்டுமொத்த உலக நாடுகளையே ஆட்டம் காணச் செய்கிறது. கரோனாவின் வீரியத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் விழிபிதுங்கி போயுள்ளன. இந்தியாவிலும் கரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. தற்போதோ இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 650 ஆக உயர்ந்துள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழி மக்களைத் தனிமைப்படுத்துவதே என்று உணர்ந்த மத்திய அரசு நாடு முழுவதும் மூன்று வாரங்களுக்கு (ஏப்ரல் 14 வரை) ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. அதற்கு முன்பாகவே, பல மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என அனைத்தையும் மூடவும், 144 உத்தரவையும் பிறப்பித்தன.
சமூகப் பரவலைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே கரோனாவிலிருந்து முழுமையாக விடுபட முடியும். இதனை உணர்ந்த சீன அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களைத் தனிமைப்படுத்தி, கரோனா பாதிப்பை பெருமளவு குறைத்துள்ளது. இதனைக் கடைப்பிடிக்காத இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொத்துகொத்தாக மக்கள் இறந்துவருகிறார்கள். இந்த இரு செயல்முறைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து தனிமைப்படுத்தலின் அதிமுக்கியத்துவத்தை உணர வேண்டும்.
சீனாவை உதாரணமாகக் கொண்டு களமிறங்கியுள்ள இந்திய அரசு ஊரடங்கைப் பின்பற்றாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. தமிழ்நாட்டிலும் இந்த நடவடிக்கை தொடர்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு தீவிரச் சோதனையை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அரசின் உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சில காவலர்கள் மக்களிடம் கனிவாக எடுத்துக் கூறியும், அறிவுரை கூறியும் வீட்டிலிருக்க வலியுறுத்துகின்றனர்.
மேலும் சிலர் தேவையில்லாமல் வெளியில் நடமாட, அவர்களுக்கு காவல் துறையினர் சில சட்டத்திற்கு புறம்பான தண்டனைகளை வழங்கி வருவது அன்றாடம் அரங்கேறுகிறது. ஒரு நாகரிகமடைந்த சமூகம் நிலைமையின் தீவிரத்தைக் கண்டுகொள்ளமால் வெளியில் சுற்றி இதுபோன்ற தண்டனைகளைப் பெறுவது உவப்பானதா?
நேற்று (மார்ச் 26) தேசிய ஊரடங்கின் முதல் நாள் என்பதால் காவலர்களின் நடவடிக்கை சாதாரணமாக இருந்ததாகவும் நாள்கள் போக போக நடவடிக்கைகள் வேறு மாதிரி இருக்குமெனவும் எச்சரித்துள்ளார் அமைச்சர் கே. பாண்டியராஜன். இதனையே மற்ற அமைச்சர்களும் வழிமொழிகின்றனர். அனைவரும் கட்டுக்கோப்பாக வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டும் என்பதே அரசின் ஒற்றை நோக்கமாகவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
காவல் துறையினரால் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் கண்காணிப்பது கடினம் என்பதால், இன்று ட்ரோன் கேமராக்களை தலைநகர் சென்னை, கன்னியாகுமரி, ஈரோடு மாவட்டங்களில் களமிறக்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள முக்கியச் சாலைகள், காவல் துறையினரால் செல்ல முடியாத இடங்கள், இரு மாநிலங்களின் எல்லைகளிலுள்ள சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்களைப் பறக்கவிட்டு, அடாவடித்தனாமாக வெளியில் சுற்றும் நபர்களைக் கண்காணிக்கவுள்ளனர் காவல் துறையினர்.
சமூகப் பரவல் என்பது அண்டை மாநிலங்களில் உள்ள நபர்களாலும் ஏற்படக் கூடும் என்பதால், தமிழ்நாட்டிற்குள் வராமல் தடுக்கப்பட்டு கேரளா, கர்நாடகா, ஆந்திர எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு - கேரள மாநில எல்லையான கன்னியாகுமரி, தமிழ்நாடு - கர்நாடகா மாநில எல்லைகளான ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த முறையைச் செயல்படுத்தவுள்ளனர்.
இதனால் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும் எனவும், வெளியில் வருபவர்களை எளிதாக அடையாளம் கண்டு விரைவில் நடவடிக்கை எடுத்து மற்றவர்கள் இதுபோன்ற தவறிழைக்காமல் கட்டுப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் காவல் துறையினர்.