சென்னை: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு மரணமடைந்த ராஜசேகரின் தாய் உஷா ராணி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணைக்காக இன்று(ஜூன் 14) ஆஜரானார். ராஜசேகரின் தாயார் உஷாராணி மற்றும் அவரது சகோதரர், சகோதரிகள் தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்ததாக மாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து விசாரணை மற்றும் ராஜசேகரின் உறவினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் இடைக்கால பரிந்துரை செய்துள்ளது. மேலும் கெல்லீஸ் பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் உஷா ராணி மற்றும் அவர்களது உறவினர்கள் பாதுகாப்புக்கருதி தங்க ஏற்பாடு செய்யுமாறும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
ராஜசேகரின் உடற்கூராய்வு அறிக்கை கிடைக்கவில்லை எனவும்; அவரது தாய் உஷா ராணி தெரிவித்ததாக சுட்டிக்காட்டிய மாநில மனித உரிமைகள் ஆணையம், விரைவில் பிரேத பரிசோதனை அறிக்கை கொடுக்குமாறும் சென்னை காவல் ஆணையரிடம் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படியும் மாநில மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
தாய் குற்றச்சாட்டு: இதற்கிடையில் தாயார் உஷா ராணி செய்தியாளர்களிடம் கூறுகையில், "என்னுடைய மகன் மரணத்தில் உரிய நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கப்போவதில்லை. உடனடியாக பிரேதப்பரிசோதனை முதல் மருத்துவ அறிக்கையைப் பெற்று தருமாறு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளோம். இன்று(ஜூன் 14) கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு வரச் சொன்னார்கள்.
அங்கு சென்ற பிறகு வழக்கறிஞர் ஒருவர் மூலம் காவல் துறை பணம் தர முயன்றனர். சஸ்பெண்டான 5 காவலர்களுக்கு தலா 2 லட்சம் வீதம் ரூ. 10 லட்சம் தருவதாக வழக்கறிஞர் ஒருவர் தங்களிடம் கூறினார். கொலை வழக்குப் பதிய வேண்டும். ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜை கைது செய்யவேண்டும்" என்று கண்ணீரோடு கூறினார்.