விஷால் ஃபிலிம் ஃபேக்டரி முறைகேடு வழக்கு: கணக்காளர் ரம்யாவின் முன்பிணை தள்ளுபடி - விஷால் ஃபிலிம் ஃபேக்டரி முறைகேடு
சென்னை: நடிகர் விஷாலின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், கணக்காளர் ரம்யா முன்பிணை கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால், தன்னுடைய தந்தையைத் தொடர்ந்து, சில படங்களை தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்கிற பெயரில் இயங்கும் இந்த நிறுவனம், சென்னை வடபழனி குமரன் காலனியில் உள்ளது. இதில், சாலிகிராமத்தைச் சேர்ந்த ரம்யா என்கிற பெண் கணக்காளராக, கடந்த 5 ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், 2018ஆம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் ஃபேக்டரி வருமான வரித்துறைக்குக் கட்ட வேண்டிய டி.டி.எஸ் தொகை, காணாமல் போவதாகக் கூறப்பட்டு வந்தது. இதையடுத்து, நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இது குறித்து சோதனை செய்ததில், கணக்காளர் ரம்யா அரசுக்கு கட்ட வேண்டிய டி.டி.எஸ் தொகையை, தன்னுடைய கணவர் வங்கி கணக்கிற்கும், குடும்ப உறுப்பினர் ஒருவருவரின் வங்கி கணக்கிற்கும் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் மோசடி செய்த ரம்யாவைக் கைது செய்ய வேண்டும் என்றும், மோசடி செய்த 45 லட்சம் ரூபாயைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் கூறப்பட்டது.
புகாரின் அடிப்படையில் கணக்காளர் ரம்யா மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தது உட்பட 4 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் முன்பிணைகோரி ரம்யா, அவரது கணவர் தியாகராஜன், சகோதரர் ராஜேஷ் ஆகிய மூன்று பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ரம்யா உள்ளிட்ட மூவர் தரப்பில் தற்போதைக்கு 10 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை செலுத்த தயாராக இருப்பதாகவும், நிபந்தனை அடிப்படையில் முன்பிணை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
காவல் துறை தரப்பில், பணம் கையாடல் செய்தது, ஆவணங்கள் மற்றும் தகவல்களை அழித்தது ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாகவும், வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என விசாரிக்க வேண்டியுள்ளதால் முன்பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
விஷால் தரப்பில் நிறுவன கணக்குகளிலிருந்து அனுப்பப்பட்ட தொகையை உரியவர்களுக்கு அனுப்பாமல், தன் உறவினர்களுக்கு ரம்யா அனுப்பியதாகவும், டி.டி.எஸ். தொகையிலும் கையாடல் செய்துள்ளதாகவும், அலுவலக மின்னஞ்சலை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டி முன் பிணை வழங்கக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெகதீஸ் சந்திரா, கணக்காளர் ரம்யா உட்பட 3 பேரின் முன்பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.