மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தக்கோரி, மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி, சந்தோஷ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் காலியாக இருந்த 74 மருத்துவ மேற்படிப்பு இடங்கள், தனியார் கல்லூரிகளுக்கே மீண்டும் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும், ஆண்டுதோறும் காலியிடங்களை நிரப்புவதற்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள், குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சேர்க்கும் நடைமுறைகளை பின்பற்றி வருகின்றன எனக்கூறிய நீதிபதி, தகுதி இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்குவதை தொடர அனுமதித்தால், அது தகுதியான மாணவர்களுக்கு அநீதி அழைப்பதற்கு சமம் எனவும் குறிப்பிட்டார்.
தகுதி இல்லாமல் பணம் கொடுத்து மருத்துவ மேற்படிப்பு இடங்களை விலைக்கு வாங்கும் மாணவர்களால், இந்த சமுதாயத்திற்கு பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த நீதிபதி, மருத்துவ படிப்புகளுக்கு பணம், மேலிட தொடர்பு மற்றும் அதிகாரம் ஆகியன முக்கிய காரணியாக இருக்கக்கூடாது என்றும், தகுதி மட்டுமே காரணியாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.