தமிழ்நாடு

tamil nadu

மோகன்லால் ஜுவல்லர்ஸ் நிறுவனம் ரூ. 150 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை சோதனை

By

Published : Nov 12, 2020, 3:42 PM IST

சென்னை: மோகன்லால் ஜுவல்லர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான மொத்த வியாபார நகைக்கடையில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில், ரூ. 150 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

mohanlal-jewelers
mohanlal-jewelers

சென்னை சௌகார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலையில் மோகன்லால் ஜுவல்லர்ஸ் என்ற மொத்த வியாபார நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் மோகன்லால் முகுந்த் சந்த் கட்டாரி. இந்தியா முழுவதும் பல்வேறு நகைக்கடைகளுக்கு மொத்தமாக தங்க நகைகள் செய்து மோகன்லால் ஜுவல்லர்ஸ் நிறுவனம் அனுப்பி வருகிறது.

இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை, மதுரை, நெல்லை, திருநெல்வேலி, கேரளா, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 32 இடங்களில் உள்ள கிளைகளில் நவம்பர் 10ஆம் தேதி வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும், கீழ்ப்பாக்கத்தில் உள்ள உரிமையாளர் மோகன்லால் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

அப்போது, ரூ. 400 கோடி மதிப்புள்ள 814 கிலோ தங்கம் இருப்பு வைத்திருந்ததை வருமான வரித் துறையினர் கண்டிபிடித்தனர். இந்த நிறுவனம் கடந்த 2019-20 மற்றும் 2020- 2021ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 102 கோடி கணக்கு வைத்துள்ளதும், கணக்கில் வராத 50 கிலோ தங்கத்தை வைத்துள்ளதும் சோதனையில் தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனம் வரியை குறைத்து காட்டுவதற்காக தனி சாப்ட்வேர் ஒன்றை பயன்படுத்தி வரவு, செலவுகளை மறைத்து காட்டியிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆவண விவரங்களை தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், தொழில் சாரா முதலீட்டில் ஈடுபட்டு லாபத்தை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரையில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராமல் ரூ. 500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதும், இதில் ரூ. 150 கோடி வரி ஏய்ப்பு செய்ததை சம்மந்தப்பட்ட நிறுவனம் ஒப்புக்கொண்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர். மேலும், சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details