தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின், 33 வது பட்டமளிப்பு விழா வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி, காணொலி வாயிலாக பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். தமிழக மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் ஒருவர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.
மேலும், இவ்விழாவில் தமிழகத்தில் இருக்கும் 34 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் இணையவழியே ஒருங்கிணைக்கப்பட உள்ளன. அதன்மூலம், மருத்துவம் மற்றும் துணை மருத்துவம் படித்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் காணொலியில் பங்கேற்கின்றனர். இதற்கான தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளையும், நிர்வாக ஏற்பாடுகளையும் பல்கலைக்கழக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிகழ்வில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பிக்கிறார். மேலும் இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 600க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இளநிலை, முதுநிலை, பல் மருத்துவம், செவிலியர் என நூற்றுக்கணக்கான படிப்புகள் இங்குள்ளன. இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டப்படிப்புகளை முடித்துள்ள 21,889 மாணவர்கள் சிறப்பிக்கப்படவுள்ளனர். அவர்களில் 71% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாண்டி பஜாரில் பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம்!