சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன், கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கடத்தல் சம்பவத்துக்கு துணை போனதாக இவர் மீது தொடரப்பட்ட வழக்கில், இவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை முதல் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், தமிழ்செல்வனுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் பிரபாவதி, மனுதாரரின் கணவர் சிறையில் ஒரு ஆண்டு நான்கு மாதங்கள்தான் சிறையில் இருக்கிறார். தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்குவதற்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறை விதிகள் உள்ளன என்று வாதிட்டார்.