இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
கரோனா வைரசைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "கரோனா தொற்றின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்தான் அதிகம் என்ற இருந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக கடந்த 10 நாள்களில் மாறியிருப்பது; பரவலான ஆய்வுகள் ஆரம்பித்தும் இங்குள்ள உண்மை நிலை வெளிவருகிறது.
நோய்த் தொற்று கண்டறிதல், அதற்கான சிகிச்சைகள், அது குறித்து விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகளை கிராமங்களில் அதிகப்படுத்த வேண்டிய அவசியம் தற்போது வந்திருப்பத்திற்குக் காரணமே கிராமங்களை அரசு இத்தனை நாள் கண்டுகொள்ளாமல் விட்டதுதான்.
மேலும், தமிழ்நாட்டில் பல கிராமங்களில் ஆரம்பச் சுகாதார மையங்கள் முறையான கட்டமைப்பு, போதிய உபகரணங்கள், மருத்துவ ஊழியர்களோ இன்றிதான் செயல்படுகின்றன. பல நவீன மருத்துவமனைகளைக் கொண்ட பெரு நகரங்கள் கரோனாவின் தாக்கத்தில் தள்ளாடும்போது, வெறும் ஆரம்பச் சுகாதார மையங்களை மட்டும் கொண்டிருக்கும் கிராமங்களில், நோய்த் தொற்று அதிகமானால் அங்கு நிலை என்னவாகும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கிராமங்களில் இந்த கரோனா தொற்று வருமுன் தடுக்கும் நடவடிக்கையை அரசு தீவிரமாக எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழர்களின் கைவண்ணத்தில் உருவாகும் தெலங்கானா தலைமை செயலகம்!