தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மநீம கட்சிக்கு சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு - Chennai High Court

சென்னை: தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
MHC

By

Published : Jan 4, 2021, 4:45 PM IST

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் மட்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் இந்தச் சின்னம் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி, கட்சியின் வடக்கு, கிழக்கு அமைப்புப் பொதுச்செயலாளரான ஓய்வுபெற்ற காவல் அலுவலர் ஏ.ஜி. மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், “மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் பேட்டரி டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு மக்களைச் சந்தித்துவந்துள்ளது. தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த முறை அந்தச் சின்னம் கட்சிக்கு ஒதுக்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறது.

எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தச் சின்னத்தைப் பயன்படுத்த அக்கட்சிக்குத் தடைவிதிக்க வேண்டும். தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவுப்படி, பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நக்கீரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி, அங்கீகரிக்கப்படாத, பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்கு இரு தேர்தல்களில் ஒரே பொது சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் எனவும், அந்த வகையில் மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரிக்கு மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பரப்புரை தொடங்கியுள்ள நிலையில், அந்தச் சின்னத்தையே ஒதுக்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தரப்பில் வாதிடப்பட்டது.

மனு குறித்து தேர்தல் ஆணையத்தின் கருத்துகளைப் பெற அவகாசம் வழங்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு விளக்கமளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 2ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: அதிமுக நிர்வாகியிடம் தகராறு; ஷாருக்கான், சல்மான்கான் கைது!

ABOUT THE AUTHOR

...view details