சென்னை:விசிக தலைவர் திருமாவளவன் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெண்கள், மத நம்பிக்கையை அவமதிக்கும் விதமாகக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார் என அவர் மீது ஆறு பிரிவுகளில் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
செப்டம்பர் 27 அன்று பல்வேறு நாட்டில் வாழும் பெரியாரிய இயக்கத்தினரால் ஒருங்கிணைக்கப்பட்ட இணையதள நிகழ்வில் உரையாற்றிய சகோதரர் திருமாவளவன், பெரியார் ஏன் சனாதன தர்மத்தை எதிர்த்தார் என்பதற்கு விளக்கம் கொடுக்கும்போது, மனுநீதி நூல்கள் பெண்களை அடிமைப்படுத்தி கொச்சைப்படுத்துகிறது; ஆகையால் பெரியார் இந்த சனாதனத்தை எதிர்த்தார் என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
ஆனால் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய திருமாவளவனையே, அவர் பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார் எனத் திரித்து அதனைப் பிரச்னையாக்கி, அவர் மீது வெறுப்புணர்வைத் தூண்டும்விதமாக பாஜக பரப்புரை செய்துவருவது கண்டிக்கத்தக்கது.
விசிக தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவுப்படுத்தி, கொச்சைப்படுத்தும் நோக்கில் எந்தக் கருத்தையும் தெரிவிக்காத நிலையில் அவர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது ஏற்றுக்கொள்ள இயலாதது. எனவே, திருமாவளவன் மீது பதிவுசெய்துள்ள வழக்குகளை காவல் துறையினர் உடனே திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.