முன்னதாக, அதிமுக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அ.முகமது ஜான், கடந்த மார்ச் 23ஆம் தேதி காலமானார். இதனால் அவர் வகித்த எம்.பி. பதவி வெற்றிடமானது. வெற்றிடமாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக சார்பில் எம். எம். அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார். அவருடன் 3 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளரை முன்நிறுத்தவில்லை.
முன்னரே உறுதியான அப்துல்லாவின் வெற்றி
இதையடுத்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி எம்.எம். அப்துல்லாவின் மனு மட்டுமே ஏற்கப்பட்டது. மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சீனிவாசன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவலில், 'தமிழ்நாடு மாநிலங்களவை இடைத்தேர்தலில், திமுகவைச் சேர்ந்த மு.முகமது அப்துல்லா போட்டியின்றி முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்' எனத் தெரிவித்தார்.
ஆர்.எஸ். பாரதி, திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, டி.கே.எஸ். இளங்கோவன், எம். சண்முகம், அந்தியூர் செல்வராஜ், பி.வில்சன் ஆகியோர் திமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்து வந்த நிலையில்,எம். எம். அப்துல்லாவின் வெற்றியால் திமுக மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, தற்போது திமுக வெளிநாடுவாழ் இந்தியர் நல அணியின் இணைச் செயலாளராக இருக்கிறார்.
1993ஆம் ஆண்டு முதல் புதுக்கோட்டை நகர திமுக மாணவரணி துணை அமைப்பாளராக இருந்து படிப்படியாக பல்வேறு பொறுப்புகளில் முன்னேறி, தற்போது திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக ஆகியுள்ளார், எம்.எம். அப்துல்லா.
இதையும் படிங்க: ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: செப். 17இல் முக்கிய உத்தரவு