தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக, உறுப்பினர்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை நடைபெற்றது.
சட்டபேரவைத் தலைவர் பொறுப்புக்கு விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ விஜயதரணி, குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ பிரின்ஸ் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுவதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் சில உறுப்பினர்களும் இந்தப் பொறுப்புக்கு போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக கடந்த 7ஆம் தேதி புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால், அதில் அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, இன்று மீண்டும் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து டெல்லி தலைமைதான் முடிவு செய்யும் என எம்எல்ஏ விஜயதாரணி தகவல் தெரிவித்துள்ளார்.