சென்னை: புளியந்தோப்பில் உள்ள கே.பி பூங்காவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் சட்டப்பேரவையில் குற்றம் சாட்டியுள்ளார்.
எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை சட்டப்பேரவையில் முன்னதாகக் கொண்டு வந்தார். அதில் ”சென்னை, புளியந்தோப்பில் உள்ள கே.பி பூங்காவில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தொட்டாலே உதிரும் சிமெண்டை கொண்டு இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது கட்டிய கட்டடங்களை ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும். இந்தக் கட்டடம் அமைக்க ஒப்புதல் அளித்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், "கே.பி பூங்காவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மிகவும் மோசமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்களை ஆய்வுக்குள் கொண்டு வர வேண்டும் என எம்எல்ஏ பரந்தாமன் கோரியுள்ளார்.