சென்னை:சேப்பாக்கம் கலைவாணர் அரங்கிலுள்ள மண்டபத்தில் இன்று (ஆக.13) தமிழ்நாட்டின் வரவு-செலவுத் திட்ட அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்றது.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டின் முதல் காகிதமில்லா வரவு-செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
நிதி நிலை அறிக்கை
வரவு-செலவுத் திட்ட அறிக்கை தாக்கலுக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த சட்டப்பேரவை உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன், “வரவு-செலவுத் திட்ட அறிக்கை தாக்கலில் 20ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. நிதி அமைச்சரின் நிதி நிலை அறிக்கையை நான் வரவேற்கிறேன். சித்த மருத்துவமனை அமைப்பதாக நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறார்கள்.
இந்த சித்த மருத்துவத்திற்கான மருத்துவமனையை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைக்கிறேன்.
தமிழ்நாடு வல்லரசு நாடாக இருக்கும்
செலவு அதிகமாக இருக்கும் போதிலும் முதலமைச்சரின் துணையோடு, நிதியமைச்சர் சிறப்பான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளார். வருங்காலத்தில் தமிழ்நாடு வல்லரசு நாடாக இருக்கும் என்பதை இந்த நிதிநிலை அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு - இன்று நள்ளிரவு முதல் அமல்