தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'இந்த பூச்சாண்டி செயல்களுக்கு திமுக அஞ்சாது' - ரைடு குறித்து துரைமுருகன் - Duraimurugan talks about the income tax audit at Sabarisan's house

இது அரசியல் ரீதியான ஐடி ரைடு. இது போன்ற பூச்சாண்டி செயல்களுக்கு திமுக அஞ்சாது என திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

ஐ.டி ரெய்டு துரைமுருகன் பேட்டி
ஐ.டி ரெய்டு துரைமுருகன் பேட்டி

By

Published : Apr 2, 2021, 11:37 AM IST

Updated : Apr 2, 2021, 1:25 PM IST

வேலூர்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று(ஏப்ரல். 02) தனது வீட்டில் அவசரமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை, அவரது கணவர் சபரீசன் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு வேட்பாளரும் பரப்புரையை முடித்து ஓட்டுச்சாவடியை நோக்கி பயணம் செய்யும் நேரத்தில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனை யாவும் அரசியல் நோக்கத்திற்காகவே அரங்கேறி உள்ளது. தேர்தல் நேரத்தில் இச் சோதனைகளை கண்டு ஸ்டாலினோ அவரது கட்சியினரோ தளர்ந்து விடுவார்கள் என்று மத்திய அரசு தவறான கணக்கு போட்டுள்ளது.

ஐ.டி. ரெய்டு போன்ற அடக்குமுறைக்கெல்லாம் அஞ்சினால் எப்போதோ திமுக அழிந்திருக்கும்; இதெற்கெல்லாம் எப்போதும் அஞ்சமாட்டோம். மிசா காலத்தில் கருணாநிதி மனைவி ராஜாத்தி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அப்போது அவர் வீட்டின் வெளியில் அமர்ந்து கொண்டு உடன்பிறப்புகளுக்கு மடல் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த அலுவலர்கள் அவரிடம் நக்கலாக கேள்விகள் கேட்டனர். அதற்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து அவர் மடல் எழுதிக்கொண்டிருந்தார்.

வேலூரில் துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு

ஸ்டாலின் அவரது தந்தை கருணாநிதியைவிட இரும்பு நெஞ்சம் கொண்டவர். அவரது மகள் வீட்டில் சோதனை நடைபெறுகிறது என்று தெரிந்தும் அவர் அது குறித்த வருத்தம் கொள்ளாமல் தொண்டர்களுக்கான தன்னுடைய பணியினை தொடர்ந்து செய்துவருகிறார். ஸ்டாலினை பயமுறுத்திவிடலாம் என நினைப்பது அப்பாவித்தனம். மத்திய அரசின் இந்தப் போக்கு ஜனநாயகம் அல்ல. வருமானவரித் துறை சோதனை நடத்தும் மத்திய அரசின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

இது அரசியல் ரீதியான ஐ.டி. ரைடு. இது போன்ற பூச்சாண்டி செயல்களுக்கு திமுக அஞ்சாது. பாஜக கூட்டணியின் தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் இந்தச் சோதனை. இது போன்ற நடவடிக்கை எ.வ. வேலு ஆகியோர் வீட்டிலும் சமீபத்தில் நடைபெற்றது. இவற்றிற்கு நான் கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறேன்" என்று தெரிவித்தார் .

தொடர்ந்து தேர்தல் சமயத்தில் ரஜினிக்கு தாதா சாகிப் பால்கே விருது கொடுத்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "அவருக்கு வழங்கப்பட வேண்டிய விருதுதான். நானே அவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தேன்" என்றார்.

திமுக, அதிமுக தொடர்பானவர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்றதற்கு, "எங்களை பயமுறுத்த சோதனை நடத்துகின்றனர். மற்ற கட்சிகள் மீது கண் துடைப்பிற்காக நடத்திவருகின்றனர்" என்றார்.

Last Updated : Apr 2, 2021, 1:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details