சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக இந்தியா வருகிறார். அவர், பிரதமர் நரேந்திர மோடியை சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் சந்தித்துப்பேசுகிறார். அக்டோபர் 11ஆம் தேதி முதல் நடைபெறும் இந்தச் சந்திப்பில் இருநாட்டுத் தலைவர்களும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் சீன அதிபரின் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
இந்தியாவைப் போலவே, பழமையான பண்பாடும் நாகரிகமும் கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழ்நாட்டிற்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அவரை மனமார வரவேற்கின்றேன். சீனாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பல்லவ மன்னர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய மாமல்லபுரத்திற்கு அவர் வருகை தருவது, இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.
பொதுவுடமைத் தத்துவத்தைக் கையில் எடுத்து சீனப் பெருந்தலைவர் மாவோ நடத்திய புரட்சியையடுத்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1949ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றி உலகத்தையே திரும்பிப் பார்த்திட வைத்தது. அதன் 70ஆவது ஆண்டு விழாவை கொண்டாடிவிட்டு சீன அதிபர் தமிழ்நாட்டிற்கு வருகிறார். அதே 1949ஆம் ஆண்டு, அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகமும் தனது 70ஆவது ஆண்டு விழாவைப் போற்றிக் கொண்டு இருக்கிறது.
சீனப்புரட்சி, அடுத்தடுத்து உலகின் பல்வேறு நாடுகளில் உருவான சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. அத்தகைய தேசத்தின் அதிபர், தமிழ்நாட்டிற்கு வருவது உண்மையில் பெருமைக்குரியதாகும். தமிழ்நாட்டிற்கும் சீனாவுக்குமான பண்பாட்டு உறவுகள், வணிகத் தொடர்புகள் இன்று நேற்று ஏற்பட்டது அல்ல; குடியரசு காலத்துக்கும் காலனிய காலத்துக்கும் முந்தைய மன்னராட்சிக் காலங்களில் இருந்து தொடர்கிறது.