இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
'காவல் துறைக்கு உபகரணங்கள் கொள் முதல் செய்ததில் ரூ.350 கோடி ஊழல் நடைபெற்றது தொடர்பாக வழக்கில் உள்துறைச் செயலாளரை விசாரிக்க ஆணையிட்டும், இன்னும் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை எந்தவித விசாரணையும் நடத்தாமல் இருப்பதாக இன்று செய்தி வெளிவந்திருக்கிறது. இது தொடர்பாக, அதிமுக அரசு ஊழலை ஊறப்போடவும், விசாரணையை முடிந்தவரை தாமதப்படுத்தவும் முயற்சி செய்கிறது என்பதை உணர்த்துகிறது.
ஊழல் புகாருக்கு ஆளான டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு கண்காணிப்பாளரை அதே பதவியில் வைத்துக் கொண்டு, இந்த ஊழல் தொடர்பான அலுவலகக் கோப்புகளை பத்திரமாக வைத்திருந்த அமைச்சுப் பணியாளர் ராஜா சிங்கை மட்டும் திடீரென்று ராமநாதபுரத்துக்கு மாற்றியிருப்பது ஆதாரங்களை அழிக்கும் முயற்சி என்ற சந்தேகம் எழுகிறது. காவல்துறை தொழில் நுட்பப் பிரிவில் உள்ள கண்காணிப்பாளருக்கு, ஆணையிட்ட உயர் காவல்துறை அலுவலர்கள், யார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தமிழ்நாடு காவல்துறையை ஊழல் துறையாக மாற்றி வரும் அதிமுக அரசின் செயல் கண்டனத்திற்குரியது.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்த ஊழல் புகார் குறித்து, 'குட்கா' ஊழல் வழக்கில் ரெய்டு செய்யப்பட்ட தமிழ்நாடு காவல்துறை டிஜிபி டி.கே. ராஜேந்திரன் ஓய்வு பெறும் வரை, எந்த விசாரணையும் நடத்தாமல் கிடப்பில் இருந்தது. பின்னர், புதிய டிஜிபியாக பொறுப்பேற்ற திரிபாதி, இந்த ஊழலை விசாரிக்குமாறு உள்துறை செயலாளருக்குக் கடிதம் அனுப்பினார். அதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு உத்தரவிட்டார் உள்துறைச் செயலாளர்.
சுதந்திரமாக செயல்பட வேண்டிய லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையும், நேர்மையானவர் என்று காவல் துறை வட்டாரத்தில் அறியப்படும் இயக்குநர் விஜயகுமார் ஐபிஎஸ்ஸும் ஊழல் அலுவலர்களைக் காப்பாற்றுவது ஏன்? என்பதுதான் புதிராக உள்ளது. ஒரு அரசு ஊழியர் மீது புகார் வந்து விட்டாலே, அவரை வேறு பதவிக்கு மாற்றுமாறு அரசுக்கு அறிவுறுத்தும் லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை, காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய புகாரில் ஈடுபட்ட அலுவலர்களை மாற்ற இதுவரை அரசுக்கு ஏன் பரிந்துரை செய்யவில்லை?