தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அரசு ஊழியர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது' - ஸ்டாலின் கண்டனம் - mk-stalin-statement-about-government-employees-salary-cut

சென்னை: அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது என்று முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

mk-stalin-statement
mk-stalin-statement

By

Published : Apr 28, 2020, 4:47 PM IST

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி”, “15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமை" ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டி குறைப்பு என்று அதிமுக அரசு, தன்னுடைய ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தின் மீது தாக்குதல் தொடுத்து, ஆணை வெளியிட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது, கண்டனத்திற்குரியது.

கரோனா நோய்த் தொற்று பேரிடர் அறிவிக்கப்பட்டவுடன் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய அரசு ஊழியர்கள், கரோனா தடுப்புப் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் ஆற்றி வருகிறார்கள். குறிப்பாக, காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் அனைவரும் மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

கரோனா நேரத்தில் நடைபெற்ற தேர்வு மையங்களில் அனைத்து ஆசிரியர்களும் பணியாற்றியுள்ளனர். அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு “அவசியமான” அனைத்துத் துறை அரசு ஊழியர்களும் ஒருங்கிணைந்து, நமது மக்களைக் காப்பாற்றிட, போர்க்கால உணர்வுடன் பணியாற்றி வரும் நேரத்தில் அதிமுக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை அரசு ஊழியர்களின் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பெருமளவில் இழக்க வைத்து மனதளவில் சோர்வடையச் செய்யும் என்ற அடிப்படை உண்மையைக் கூட அரசு ஏனோ உணரவில்லை.

“அகவிலைப்படி ரத்து, ஈட்டிய விடுப்பிற்குப் பதில் ஊதியம் பெறும் உரிமை ரத்து” போன்றவை அரசு ஊழியர்களின் பொருளாதார நிலைமையைப் பாதிக்கும். அவர்களுக்கு முற்றிலும் எதிரான அரசாணைகளை முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்குச் சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்கு, நிதிக் கமிஷன் பகிர்வு போன்ற பல்வேறு நிதிகளையும், கரோனா பேரிடர் நிவாரணத்துக்கான நிதியையும், தேவையான அரசியல் அழுத்தம் கொடுத்து, உரிமையுடன் தட்டிக் கேட்டு, உடனடியாகப் பெற வேண்டும். அதை விடுத்து, தனது விரலைக் கொண்டே தன்னுடைய கண்ணைக் குத்திக் கொள்வதைப் போல, அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details