சென்னை:திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.7) கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “இன்றைய தினம் தமிழ்நாட்டை ஆளும் அரசு, இந்த மாவட்டத்துக்கு மட்டுமல்ல, எந்த மாவட்டத்துக்கும் எதுவும் செய்யவில்லை. இது விவசாயிகள் அதிகமாக வாழும் பகுதியாகும். அதிலும் குறிப்பாக கரும்பு விவசாயிகள் அதிகம் வாழும் பகுதி. கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை, மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை ஆகிய இரண்டு ஆலைகள் இருக்கின்றன.
கரும்பு விவசாயிகளிடம் இருந்து கரும்பு பெறும் சர்க்கரை ஆலைகள், அதற்கான விலையை முறையாக, ஒழுங்காக உரிய நேரத்தில் தருகிறார்களா என்றால், இல்லை. இத்தொகையை வாங்கித் தருவதற்கான போராட்டத்தை நாம் தான் நடத்தினோம். சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினோம். விவசாயிகள் கைக்கு ஓரளவு பணம் வந்து சேர போராடினோம். ஆனால் முழுமையாக இன்னமும் வரவில்லை.
தமிழ்நாட்டில் மட்டும் 46 சர்க்கரை ஆலைகள் மூலமாக விவசாயிகளுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் தரப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். இதில் அரசு சர்க்கரை ஆலைகளும் உள்ளன; தனியார் சர்க்கரை ஆலைகளும் உள்ளன. இருவருமே முழுமையாக பணம் தரவில்லை, பாக்கி வைத்துள்ளார்கள். அந்தக் தொகையை வாங்கித் தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை அல்லவா?
இந்த இலட்சணத்தில் மத்திய அரசு வேளாண்மைச் சட்டம் வந்தால் என்னவாகும். மத்திய அரசு தான் கொண்டுவரும் வேளாண் சட்டங்களை ஆதரித்து ஒரு விளம்பரத்தைப் பத்திரிகைகளில் கொடுத்தார்கள். அதில் பருத்தி, காபி, தேயிலை, கரும்பு ஆகியவை போலவே கார்ப்பரேட் நிறுவனங்களோடு சேர்ந்து விவசாயிகள் தொழில் செய்யலாம், அதிக லாபம் பெறலாம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள்.
இந்த விளம்பரம் தயாரித்தவர்கள் கள்ளக்குறிச்சிக்கு வந்து கரும்பு விவசாயிகளிடம் கருத்துக் கேட்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களா, இல்லையா என்பதைக் கேட்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வாரக்கணக்கில் அல்ல; மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் பாக்கி வைத்துள்ளார்கள். பிறகு அவர்களால் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்?
கரும்பு விவசாயியின் வாழ்க்கை, ஆலையில் அரைக்கப்படும் கரும்பாக ஆகிவிட்டது. அதே போல் மற்ற விவசாயிகளின் வாழ்வையும் நசுக்க நினைக்கிறார்கள். அதற்காகத்தான் வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்கள். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகச் சட்டம் கொண்டு வந்துவிட்டு, அதனை விவசாயிகள் ஆதரிக்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது.
அந்தச் சட்டத்தை ‘நானும் விவசாயி தான்’ என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார். அந்த மூன்று சட்டங்களும் நிறைவேறினால் வேளாண்மை சிதைந்து போகும். விவசாயி வாழ்க்கை இருண்டு போகும். அதனால் நாங்கள் எதிர்க்கிறோம்.
எல்லா விவசாயிகளுக்கும் இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு, தான் விளைவிக்கும் பொருளுக்கு உரிய குறைந்தபட்ச விலை வேண்டும் என்பதுதான். அதுவே இந்த மூன்று சட்டத்திலும் இல்லை. இது ஒன்றே போதாதா இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு?
ஆனால் எல்லாம் தெரிந்தவரைப் போல ஆதரிக்கிறார் பழனிசாமி. “ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியுமா?” என்று கேட்கிறார் பழனிசாமி. நான் விவசாயி என்றோ, விவசாயம் செய்வதாகவோ சொன்னேனா? இல்லையே. விவசாயிகளின் கஷ்டம் தெரிவதற்கு விவசாயியாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. விவசாயத்தின் மீது, விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால் போதும். அது என்னிடம் இருக்கிறது.
விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருப்பதால் தான் அந்த மூன்று சட்டங்களுக்கும் எதிராக நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் - மக்களவையிலும் பேசினோம். கண்டித்தோம். எதிர்ப்புத் தெரிவித்தோம். உடனடியாக தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளோம்.
மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்துத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிடவேண்டும், சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
வேளாண்மை நாட்டின் முதுகெலும்பு என்றால், விவசாயிகள் நம் மாநிலத்தின் உயிரோட்டமானதும் விலைமதிப்பற்றதுமான அரிய சொத்துகள்! அவர்களின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றிடும் கடமை உணர்ச்சி மாநில அரசுக்கு இருக்க வேண்டும். அத்தகைய உணர்ச்சி எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தால் அவரை விவசாயி என்று ஒப்புக்கொள்ளலாம்.
அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் இருக்கும் பொருள் 14-ல் இருக்கும் வேளாண்மை தொடர்பான சட்டங்களை நிறைவேற்றும் முழு அதிகாரமும் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது.
அதேபோல் நிலம் - நிலம் சார்ந்த உடன்படிக்கை ஆகியவை மாநிலப் பட்டியல் 18-ல் இருக்கிறது.