இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குளறுபடிகளாலும், நிர்வாக சீர்கேட்டாலும் மருத்துவர்கள், செவிலியர், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட கரோனா போரின் முன்கள வீரர்களாகச் செயல்படுவோருக்கே பரவலாக நோய்த்தொற்று ஏற்படும் மோசமான நிலையை உருவாக்கியுள்ளது எடப்பாடி அரசு.
தற்போது தமிழ்நாட்டில் சமூகத் தொற்றை எதிர்கொண்டிருக்கிறோமோ என்ற ஆபத்தான சூழலில், அதற்குப் பொதுமக்கள் மீதும் வணிகர்கள் - தொழிலாளர்கள் மீதும் பழிபோட்டுத் தப்பிக்க நினைக்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து மக்களிடம் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மக்கள் நெரிசல் ஏற்பட்டு, நோய்த்தொற்று பரவியதற்கு, சந்தையை இடம் மாற்றம் செய்ய வியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை எனப் பழியைத் தூக்கி வணிகர்கள் மீது போட்டுள்ளார்.