இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. அப்போது, ஆளுநர் தனது உரையை தொடங்கும் முன்பாக, நேற்று தாக்கலான மத்திய பட்ஜெட் குறித்து பேச திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ”பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் விலைவாசி விஷம் போல் உயர்ந்துள்ளது. அதுகுறித்தோ, விவசாயிகள் குறித்தோ எந்த அறிவிப்பும் இல்லாமல் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
கூட்டத்தொடர் முழுவதும் புறக்கணிப்பு! - மு.க.ஸ்டாலின் 2015ஆம் ஆண்டு பட்ஜெட்டிலேயே மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் எனக் கூறியிருந்தது. பிரதமர் மோடியும் வந்து அடிக்கல் நாட்டுவது போன்று நாடகத்தை நடத்தி விட்டு சென்றார். ஆனால், அங்கு இதுவரை ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. ஆளுநர் வாசித்த இன்றைய உரைதான் இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மீது ஆதாரங்களுடன் ஆளுநரிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. ஆளுநர் அதிமுக ஆட்சிக்கு ஆதரவாகவே செயல்படுகிறார். மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, ஆளுநர் உரை மட்டுமின்றி இந்த கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் செய்திகள் உடனுக்குடன்