தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 12, 2022, 2:27 PM IST

ETV Bharat / city

பாரதியார் நினைவு தின கவிதைப்போட்டி - வெற்றிபெற்றவர்களுக்கு பாரதி இளங்கவிஞர் விருது வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’ மற்றும் ‘தேன்சிட்டு’, ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ ஆகிய இதழ்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’ மற்றும் ‘தேன்சிட்டு’ என்ற இதழ்களையும், ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ என்ற இதழையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு, பாரதி இளங்கவிஞர் விருதினை மாணவ, மாணவியருக்கு வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.12) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’ என்ற இதழையும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘தேன்சிட்டு’ என்கிற இதழையும், ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ என்ற இதழையும் வெளியிட்டார்.

குழந்தைகளின் அறிவுக்கண்களைத் திறப்பது வாசிப்புப் பழக்கம். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி இவ்வுலகை அறிந்து கொள்ளவும் சமூகம் குறித்த புரிதலை மாணவர்களிடையே உருவாக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென பருவ இதழ்களை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது. அதன்படி, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ என்கிற இதழும் மாதமிருமுறை இதழாக வெளியிடப்படுகிறது.

குழந்தைகளின் ஆக்கங்களோடு, அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், செய்திகள், சுவையான கதைகள் போன்றவை இவ்விதழ்களில் வெளியிடப்படும். இவை மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கென தனியே ‘கனவு ஆசிரியர்’ என்ற மாதாந்திர இதழும் வெளியிடப்படுகிறது. ஆசிரியர்களின் படைப்புகளோடும் வகுப்பறை அனுபவங்களோடும் அவர்களுக்கான சிறப்புக் கட்டுரைகளோடும் ‘கனவு ஆசிரியர்’ இதழ் வெளியாக இருக்கிறது.

ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ இதழ் வெளியீடு
கவிதைப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பாரதி இளங்கவிஞர் விருது வழங்கல்
பள்ளி மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’ மற்றும் ‘தேன்சிட்டு’ இதழ்கள் வெளியீடு

’ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு’, ‘கனவுஆசிரியர்’ ஆகிய மூன்று இதழ்களை முதலமைச்சர் வெளியிட பள்ளிக்குழந்தைகளும், ஆசிரியர்களும் இதழ்களைப் பெற்றுக்கொண்டனர். மகாகவி பாரதியார் நினைவு தின கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற சேலம், அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் பா.பிரவீன் மற்றும் தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி ர.சைனி ஆகியோருக்கு முதலமைச்சர், பாரதி இளங்கவிஞர் விருதிற்கான தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை வழங்கி வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார் உட்பட பிற அரசு உயர் அலுவலர்களும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்கக்கோரி அரசுக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details