தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அம்பேத்கரின் சட்டக் கட்டமைப்பை பாஜகவால் அசைக்க முடியவில்லை - மு.க. ஸ்டாலின் - ambedkar birthday

அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்குப் பலவகைகளில் பாதுகாப்பைத் தந்து வருகிறது. சட்டம் என்பதற்கும் மேலாக ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ எனப் பலராலும் அது போற்றப்பட அம்பேத்கரின் சமூகச் சிந்தனையே காரணம்.

அம்பேத்கர் பிறந்தநாள்
அம்பேத்கர் பிறந்தநாள்

By

Published : Apr 14, 2021, 12:49 PM IST

சென்னை: இன்று (14.04.2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணல் அம்பேத்கரின் 130-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கர் வழி நின்று திமுக தன் கடமையை நிறைவேற்றும் என தெரிவித்த ஸ்டாலின், தனது பேஸ்புக் பக்கத்தில் அம்பேத்கர் குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், இந்தியா முழுவதும் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அனைத்துக்குமான ஒளிவிளக்காகவும் - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடித்துக் கொடுத்து அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு அணையா விளக்காகவும் - இருந்து இன்றும் வழிகாட்டி வரும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 130-ஆம் ஆண்டு பிறந்தநாள் அன்று அவரது நினைவைப் போற்றுவது நம் அனைவரின் கடமையாகும்.

சமூகம் - சட்டம் - கல்வி - பொருளாதாரம் - அரசியல் - வரலாறு - தத்துவம் அனைத்துக்கும் ஒருசேர ஒருவரை அடையாளம் காட்ட முடியுமானால் அது டாக்டர் அம்பேத்கராகத்தான் இருக்க முடியும். இத்துறைகள் அனைத்திலும் முத்திரை பதித்தவர் மட்டுமல்ல, இத்துறைகளின் திசைகளைத் திருப்பியவரும் அவரே.

ஒரு மனிதர் இவ்வளவு படிக்க முடியுமா, இவ்வளவு எழுத முடியுமா, இப்படி எல்லாம் சிந்திக்க முடியுமா, இந்தளவுக்கு உறுதியைக் கடைப்பிடிக்க முடியுமா, இவ்வளவு போராட முடியுமா என்று சிந்தித்தால் அதிலும் தலைசிறந்த இடம் பிடிக்கக் கூடியவர் அம்பேத்கர் அவர்கள்.

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உரிமை பெற அகில இந்திய அளவில் வழிகாட்டியாக அவர் இன்று வரை விளங்கி வருகிறார். அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்குப் பலவகைகளில் பாதுகாப்பைத் தந்து வருகிறது. சட்டம் என்பதற்கும் மேலாக ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ எனப் பலராலும் அது போற்றப்பட அம்பேத்கரின் சமூகச் சிந்தனையே காரணம். அனைத்து மக்களுக்கும் சட்ட உரிமையை நிலைநாட்டக் காரணமாக அது அமைந்துள்ளது. அந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்பைச் சிதைக்க இன்றைய பா.ஜ.க. அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் அம்பேத்கரின் சட்டக் கட்டமைப்பை அவர்களால் அசைக்க முடியவில்லை.

''டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்குச் சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது" என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள், ''எனக்குத் தலைவராக இருக்கும் தகுதி படைத்தவர் அம்பேத்கர்" என்று சொன்னார்கள். அத்தகைய மாமேதையின் நினைவாக அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம், மகளிர் கல்லூரி அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அம்பேத்கர் படத்துக்கு நிதி உதவியும், அம்பேத்கர் பெயரால் விருதும் வழங்கினார்கள். அம்பேத்கர் நூற்றாண்டு விழாவைச் சிறப்புற நடத்தினார்கள். அம்பேத்கர் அவர்களும், திராவிட இயக்கத்தின் வழிகாட்டியாகவே போற்றப்பட்டு வருகிறார்.

''அரசியலில் கலந்து கொள்ளுங்கள். ஒரு சமூகத்தின் வலிமை அதன் விழிப்புணர்வு, கல்வி, சுயமரியாதை ஆகியவற்றில்தான் இருக்கிறது” என்றார் அவர். சுதந்திரமான மனிதர்களை உருவாக்கவே அம்பேத்கர் அவர்கள் பாடுபட்டார்கள். ''விழிப்பான உணர்வுநிலையில் தனது உரிமைகள், பொறுப்புகள் மற்றும் கடமைகளை யார் உணர்ந்திருக்கிறார்களோ, அவர்களே சுதந்திரமான மனிதர்கள்" என்றார் அவர். அத்தகைய சுதந்திரமான சிந்தனை கொண்ட மனித சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம்! என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details