ஜிஎஸ்டி வரி சட்டம் செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு சரிகட்டும் என மத்திய அரசு கூறியது. ஆனால் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை, போதிய ஜிஎஸ்டி வருவாய் இல்லாத காரணத்தால் வழங்க முடியாது என மத்திய பாஜக அரசு கூறியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஜிஎஸ்டி சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் ரூ. 9,270 கோடி இழப்பீடு குறித்து அதிமுக அரசு அக்கறை காட்டவில்லை. 2019-20ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ஜிஎஸ்டி இழப்பீடு சுமார் ரூ. 5,909 கோடிக்கும் மேல் நிலுவலையில் உள்ளது.
ஜிஎஸ்டியால் மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு எவ்வளவு?, அதில் மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு தொகை பெற்றுள்ளோம்?, நிலுவலையில் உள்ள தொகை எவ்வளவு? என்ற கேள்விகள் குறித்து அதிமுக அரசு வெளிப்படையாகப் பேச மறுக்கிறது.