சென்னை: 18 வயதான விஸ்வா தீனதயாளன் கௌகாத்தியில் இருந்து ஷில்லாங் நகருக்கு டாக்சியில் சென்றபோது நேற்று (ஏப்.17) விபத்தில் சிக்கினார். 83ஆவது சீனியர் தேசிய மற்றும் மாநிலங்களுக்கிடையேயான டேபிள் டென்னிஸ் போட்டி இன்று (ஏப்.18) நடைபெறுகிறது.
இந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்வதற்காக, ஏப்.18ஆம் தேதி விஸ்வா தீனதயாளன் டாக்சியில் ஷில்லாங் நோக்கி சென்றார். அவருடன் சக நண்பர்கள் ரமேஷ் சந்தோஷ் குமார், அபினாஷ் பிரசன்னாஜி ஸ்ரீநிவாசன், கிஷோர் குமார் ஆகிய மூவரும் உடனிருந்தனர்.
இந்த நால்வரும் பயணித்த டாக்சி, உமிலி செக்போஸ்ட் அருகில் உள்ள சங்பங்லா என்ற இடத்தில் கோர விபத்தில் சிக்கியது. எதிரே வந்த 12 சக்கர சரக்கு வாகனம் டாக்சி மீது மோதியதில் டாக்சி டிரைவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். விஸ்வா மற்றும் அவரது மூன்று நண்பர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய மருத்துவ மற்றும் மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் விஸ்வா தீனதயாளன் உயிரிழந்தார். மற்ற மூவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டுவருகிறது. டேபிள் டென்னிஸ் வீரரான விஸ்வா தீனதயாளன் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்களை பெற்றுள்ளார்.