சென்னை: தமிழ் புத்தாண்டு நாளான இன்று ஆளுநர் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து அளிப்பது மரபாக இருந்து வருகிறது. ஆனால் நீட் உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநரின் செயல்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்து தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்திருந்தன.
இதனிடையே இன்று காலையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கிண்டி மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், மார்ச் 15ம் தேதி ஆளுநரைமுதல்வர் சந்தித்த போது, நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.நாங்களும் இன்று காலை ஆளுநலைர சந்தித்து நீட் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியுள்ளோம். ஆனால் அவர் நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க, எந்த காலக்கெடுவையும் குறிப்பிடவில்லை என இருவரும் தெரிவித்தனர். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நேரம் நெருங்குகிறது. ஆளுநர் உடனடியாக நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் திரும்பினால் மட்டுமே வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால் ஆளுநர் எங்களுக்கு எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். ஆளுநரின் இந்த நடவடிக்கை சட்டப்பேரவைக்கு களங்கம் ஏற்படுத்தும் என்று கூறிய அமைச்சர்கள், தேநீர் விருந்தில் கலந்துகொள்வது தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்றும் கூறியுள்ளனர். எனவே, தமிழ் புத்தாண்டு அன்று மாலை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக சார்பில் தமிழக முதல்வரும், மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்க மாட்டார்கள் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.