தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"கருணாநிதி இருந்திருந்தால்..!" வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் - Kalaignar

"கருணாநிதி இன்று இருந்திருந்தால் உச்சி முகர்ந்து வாழ்த்தியிருப்பார். இன்னும் நீங்கள் இலக்கிய உச்சத்தைத் தொட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். கவிப்பேரரசாற்றுப்படை தொடரட்டும். உங்கள் தமிழே உங்களைப் பல்லாண்டு வாழ்விக்கும். எனது அன்பு வாழ்த்துகள்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைரமுத்துவிற்கு எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

வைரமுத்து
வைரமுத்து

By

Published : Jul 13, 2022, 2:03 PM IST

Updated : Jul 13, 2022, 2:17 PM IST

கவிப்பேரரசு வைரமுத்துவின் 70 ஆவது பிறந்தநாளான இன்று (ஜூலை 13) மு.க.ஸ்டாலின் அவரது டிவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,

கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் - நெஞ்சுக்கினிய வாழ்த்துகள்: 70 ஆவது பிறந்தநாள் விழாவையும் இலக்கிய வாழ்வின் பொன்விழாவையும் காணும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு எனது நெஞ்சுக்கினிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அகவை எழுபதில் அடியெடுத்து வைப்பதும்; அதில் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப் பணியாற்றியதுமான பெருவாழ்வு உங்களுடையது. முதல் இருபது வயது வரை மட்டுமே தனிவாழ்க்கையாக அமைந்து, அடுத்து அடியெடுத்த ஆண்டு முதல் கலை, இலக்கிய, திரையுலக வாழ்க்கையாக அமைந்துள்ளது உங்களது வாழ்க்கை.

தங்களின் 7500 பாடல்களே தம் திறமைக்கு சாட்சி: 38 நூல்கள், 7500 பாடல்கள் என்பது எண்ணிக்கையாகக் கருத முடியாது. தமிழ் இலக்கிய வாசிப்பாளர்களது இல்லத்தின் அலமாரி தோறும் உங்கள் படைப்புகள் அலங்கரித்துக் கொண்டு இருக்கிறது. திரையுலக ரசிகர்கள் உள்ளம் தோறும் குடிகொண்டிருப்பவை உங்கள் பாடல்கள். வெளியிட்ட புத்தகங்கள் அனைத்தும் விருதுக்குரிய புத்தகங்களாக இருப்பதும்; எழுதிப் புகழ்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் பரிசுக்குரியதாக இருப்பதும் உங்களது திறமைக்குச் சாட்சி.

எந்த படைப்பாளிக்கும் கிட்டாத பெருமை:7 தேசிய விருதுகள் பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் என்பது சாதாரணமான உயரம் அல்ல. அதேபோல் தமிழ்நாடு அரசு விருதை 6 முறை பெற்றுள்ளீர்கள். உங்களது 17 நூல்களை வெளியிட்டுப் பேசி இருக்கிறார் கருணாநிதி அவர்கள். எந்தப் படைப்பாளிக்கும் வாய்க்காத பெருமை இது! கவிஞர்களுக்கு எல்லாம் பெரும் கவிஞரான கருணாநிதி அவர்களே, 'கவிப்பேரரசு' என்று வாழ்த்தினார் என்றால் அதைவிடப் பெரும்பாராட்டுத் தேவையில்லை.

தமிழோடு வாழும் படைப்புகள்: வைரமுத்து என்ற பெயர்ச் சொல்லே மறைந்து, 'கவிப்பேரரசு' என்ற சிறப்புப் பெயரே சிறப்பான பெயராக அமையும் அளவுக்கு உங்கள் தமிழே உங்களை உயர்த்தி வைத்துவிட்டது. கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், தண்ணீர் தேசம், மூன்றாம் உலகப்போர், தமிழாற்றுப்படை ஆகிய படைப்புகள் தமிழ் வாழும் காலமெல்லாம் வாழும் படைப்புகள்! ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 'வைகறை மேகங்கள்' மூலமாக இலக்கிய உலகுக்கு அறிமுகம் ஆனீர்கள். மேகமாக கரைந்து விடாமல் வைகறையாகவே நிலைத்துவிட்டீர்கள்.

கருணாநிதி இருந்திருந்தால்..!:இவை அனைத்தையும் தாண்டி, திராவிட இயக்கம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி என தாங்கள் வலம் வந்ததுதான் எங்களைப் போன்றவர்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி! கருணாநிதி அவர்கள் இன்று இருந்திருந்தால் உச்சி முகர்ந்து வாழ்த்தியிருப்பார்கள். இன்னும் நீங்கள் இலக்கிய உச்சத்தைத் தொட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். கவிப்பேரரசாற்றுப்படை தொடரட்டும். உங்கள் தமிழே உங்களைப் பல்லாண்டு வாழ்விக்கும். அன்பு வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கள்ளிக்காட்டு இதிகாசத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகராக நடித்தால் நன்றாக இருக்கும் - கவிஞர் வைரமுத்து

Last Updated : Jul 13, 2022, 2:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details