தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்... ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் லாக்-அப் மரணம் குறித்து விசாரிக்கப்படும்' - தலைமைச் செயலக குடியிருப்பு காவல்நிலையம்

சென்னையில் காவல் நிலையத்தில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கவும், சுரேஷின் உயர் மருத்துவ சிகிச்சைக்கு தமிழ்நாடு அரசு செலவில் மேற்கொள்ளப்படும் என்றும் சட்டபேரவையில் இன்று (ஏப்.26) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

By

Published : Apr 26, 2022, 5:58 PM IST

சென்னை: கடந்த அதிமுகவினரின் ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் காவல் துறையினரின் விசாரணையில் கொலை செய்யப்பட்டது தமிழ்நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதேபோல, திமுகவின் ஆட்சியில் சென்னையில் 25 வயது இளைஞர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டு லாக்-அப் மரணம் செய்யப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.

பரபரப்பை ஏற்படுத்திய லாக்-அப் மரணம்: சென்னையில் 25 வயதுடைய விக்னேஷ் என்ற இளைஞரை தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச்சென்று காவல் துறையினர் அடித்து துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது சகோதரர் என்று ஒருவர் தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் இன்று சட்டப்பேரவையிலும் எதிரொலிக்கத் தொடங்கியது.

வெளிவந்த உண்மை:புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் பகுதியில் 18.4.2022அன்று தலைமைச்செயலக குடியிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் வாகனத்தணிக்கை சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக ஆட்டோவில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் என்ற ஜொள்ளு சுரேஷ் (28), பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்(25) என்ற விக்னா ஆகியோர் வந்தனர். அவர்களை சோதனை செய்தபோது, இருவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா, மதுபாட்டில்கள், கத்தி, ஆட்டோ ஆகியவற்றைப்பறிமுதல் செய்தனர். இதன் பின்னர், இருவரையும் விசாரணைக்காக தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

காவல் துறையினரை தாக்க முயற்சி:முன்னதாக, காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லும்போது, காவல் துறையினரை விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். மேலும், காவல் நிலையத்தில் இருவரது குற்ற பின்னணிகள் குறித்தும் ஆராய்ந்ததில் விக்னேஷ் மீது இரண்டு வழக்குகளும், சுரேஷ் மீது 11 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

காவல்துறை விளக்கம்: மறுநாள் (19.4.2022) காலை வரை ஸ்டேஷனில் இருந்த இருவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் விக்னேஷுக்கு வாந்தி, வலிப்பு ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு விக்னேஷ் ஏற்கெனவே இறந்திருப்பது தெரிய வந்ததாகவும் காவல் துறையினரால் விளக்கம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சட்டப்பேரவையில் எதிரொலித்த லாக்-அப் மரணம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.26) எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, இளைஞர் விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், ‘இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சிபிஐ வசம் ஒப்படைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது பணியில் இருந்த ஒரு எஸ்.ஐ , ஒரு காவலர் மற்றும் ஊர் காவல்படைக்காவலர் ஆகியோர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர் விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்டப்படி நடவடிக்கை தேவை:காவலர் தாக்குதலில் இறந்த விக்னேஷ் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், மேலும் இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் இந்த அரசை வலியுறுத்துகிறோம். மேலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவித்தார்.

கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு: ’கஞ்சா போதையில் இருந்தவர்களை காவல் துறை விசாரித்து, சோதனை செய்தது. அவர்கள் கஞ்சா வைத்திருந்தனர். அப்போது விக்னேஷ் கத்தியைக் காட்டி காவல் துறையை மிரட்டினார். பின்புலத்தை ஆய்வு செய்தபோது, அவர்கள் மீது ஏற்கெனவே, பல வழக்குகள் இருந்தன. காலை உணவு அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்டபின்பு விக்னேஷுக்கு வலிப்பு மற்றும் வாந்தி வந்தது.

அரசு முறையான நடவடிக்கை எடுக்கும்: பின் சிகிச்சைக்காக, மருத்துவமனை கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளார். சந்தேக மரணமாக இவ் வழக்கு உள்ள நிலையில் ஒரு எஸ்.ஐ, ஒரு காவலர் மற்றும் ஊர்காவல் படை காவலர் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆணையர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளார். முறையான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.

காவல் மரணத்தில் தீவிர விசாரணை உறுதி: காவல் நிலையத்தில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கவும், சுரேஷின் உயர் மருத்துவ சிகிச்சை ஆனது தமிழ்நாடு அரசின் செலவில் மேற்கொள்ளப்படும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காவல் மரணத்தில் தீவிர விசாரணை என்பதில் உறுதியாக உள்ளோம்’ என்றார்.

இதையும் படிங்க: தந்தை மகன் உயிரிழப்பு: 'லாக் அப்' சந்தேகங்களுக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும்

ABOUT THE AUTHOR

...view details