ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா அரங்கத்தில், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அலுவலர்களுக்கு கூறிய அறிவுறுத்தல்கள்:
• ஊழியர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் முழுமையாக வழங்குதலை 100% கண்காணிக்க வேண்டும். இரண்டு மாத கிருமி நாசினிகளின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.
• பொதுமக்களுக்கு காவல் துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். தனி நபர் இடைவெளியை அனைத்து பொது இடங்களிலும் உறுதி செய்திட வேண்டும்.
• அனைத்து அம்மா உணவகங்களும் மூன்று வேளையும் தரமான, சூடான விலையில்லா சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.
• நோய் தொற்று உள்ளவர்கள் வீடுகளில் குப்பையை விஞ்ஞான முறைப்படி தனியாக சேகரிக்க வேண்டும்.
• கட்டுப்படுத்தப்பட்டப் பகுதிகளில் மக்கள் வெளியில் வருவதைக் கண்காணிக்க அதிகளவிலான கேமராக்களை அமைத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அனைத்து பகுதிகளுக்கும் நாள்தோறும் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
கரோனா தடுப்புப் பணிகள் - அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்! மேலும், "நோய் தடுப்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு வழங்க 1.5 லட்சம் எண்ணிக்கையிலான கபசுரக் குடிநீர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ’விட்டமின் சி’ ஊட்டச்சத்துகளும் வழங்கப்படும். மாநகரில் 1,949 தள்ளுவண்டிகள் மற்றும் 1,100 சிறிய வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பல்வேறு இடங்களில் 21,108 படுக்கைகளும், பாதிக்கப்பட்டவர் வீடு அமைந்திருக்கும் பகுதியினரை தனிமைப்படுத்த 21 ஆயிரத்து 866 படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்தான் அதிகளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன“ என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், கரோனா தடுப்பு சிறப்புக்குழு தலைவரும், வருவாய் நிர்வாக ஆணையருமான ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா முற்றாக ஒழியும் வரை டாஸ்மாக் கூடாது - முத்தரசன்