சென்னை: மத்தியப் பிரதேச மருத்துவ கல்வி அமைச்சர் விஷ்வாஸ் சாரங் கரோனாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் வந்து பார்வையிட்டார்.
அப்போது தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அத்துறை செயலாளர் ராதாகிருஷ்னன் உடனிருந்தனர். விஷ்வாஸ் சாரங், டி.எம்.எஸ் வளாகத்திலுள்ள 108 கட்டுப்பாடு அறை, கரோனா கட்டுப்பாடு அறை ஆகியவற்றை பார்வையிட்டார். பிறகு கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "மத்தியப் பிரதேச அமைச்சர், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் சுகாதாரத் துறை நடவடிக்கைகளை பார்வையிட்டு கேட்டறிந்தார். இந்த மழை, புயல், வெள்ள காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட உரிய நடவடிக்கை காரணமாக, கரோனா கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம்.
புயலுக்காக ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு நடவடக்கை எடுத்துள்ளோம். 8 ஆயிரத்து 456 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 435 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் 3657 முகாம் நடத்தப்பட்டு, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து நீரேற்ற நிலையங்களிலும், குளோரினேஷன் முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் லாரிகள், புயல் காலங்களில் மழைநீர் வடிந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில் குளோரினேஷன் இல்லாமல் தண்ணீர் எடுத்துச் சென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.