சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடமாடும் கட்டுப்பாட்டு அறையை தொடங்கி வைத்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " புயல் கரையை கடுக்கும் போது பாதிக்கப்படும் மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், திறன் மிகு கட்டுப்பாட்டு வாரியம், நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், திறன்மிகு தகவல் கம்பம் உள்ளிட்ட 10 வகையான கட்டுப்பாட்டு மையத்தை இன்று தொடங்கி இருக்கிறோம். பருவமழை தொடங்கியதில் இருந்து 90 மரங்கள் சென்னையில் விழுந்து அகற்றப்பட்டுள்ளன. மேலும் மரங்களை அகற்றுவதற்கென மண்டல வாரியாக தனியாக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
அம்மா உணவகங்களில் இலவச உணவு - அமைச்சர் வேலுமணி வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு தயாரித்து அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை முதல் சென்னை மாநகராட்சியில் 830 எம்எல்டி குடிநீர் கொடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இன்று தொடங்கப்பட்டுள்ள நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனம் மூலம், நீர்தேக்கங்கள், மழை தொடர்பாக சிக்கலான இடங்களுக்கு அதன் கள நிலவரத்தை இந்த வாகனத்தில் உள்ள அதிநவீன கேமராக்கள் நேரலையாக மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு காட்சிகளை அனுப்பி உடனடி மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், நகரும் கட்டுப்பாட்டு அறையில், பேரிடர் மேலாண்மை குழு, மின்சாரத்துறை, மாநகராட்சி மற்றும் காவல் மற்றும் அனைத்து மீட்பு துறையினரையும் உடனடியாக தொடர்பு கொண்டு துரித நடவடிக்கைகள் எடுக்க ஏதுவாக அதி நவீன தொலைத்தொடர்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன " எனக் கூறினார்.
இதையும் படிங்க: நிவர் புயல் மின்சார வாரியத் தொடர்பு எண்கள் அறிவிப்பு!