உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், குடிநீர் விநியோகம் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் அமைச்சர் வேலுமணி கேட்டறிந்தார். அப்போது அவர்களிடையே பேசிய அமைச்சர் பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினார். அதன்படி,
• சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள 650 குடிசைப் பகுதிகளில் சுமார் 26 லட்சம் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
• ஒவ்வொருவருக்கும் இரண்டு முகக்கவசங்கள் என துணியாலான சுமார் 50 லட்சம் முகக்கவசங்கள் நாளை முதல் இப்பகுதிகளில் வழங்கப்படும்.
• மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் பணியாளர்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து, வீடுகள்தோறும் சென்று பாதுகாப்புடன் பணிபுரிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
• பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி படிப்படியாக குடிநீர் பணிகள், நீராதாரப் பணிகள் மற்றும் 100 நாள் வேலை வாய்ப்பு பணிகளை தொடங்க வேண்டும்.