தலைமைச் செயலகத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் வேலுமணி, “ சென்னை மாநகராட்சியில் இதுவரை 58,493 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, சுமார் 30 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மாலை 3 முதல் 5 மணி, 6 முதல் 8 மணி வரை மண்டலத்திற்கு 2 மருத்துவ முகாம்கள் என, மாநகராட்சியின் 15 மண்டலங்களில் நாள்தோறும் 30 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மாநகராட்சியின் 36 மருத்துவமனைகளில், மாலை 5 முதல் 8 மணி வரை சிறப்பு மாலை நேர மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் இதுவரை 1,107 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். மாநகராட்சியில் தற்போது வரை 1,82,014 நபர்கள் பாதிக்கப்பட்டு, அவர்களில் 1,64,848 நபர்கள் குணமடைந்துள்ளனர். 13,751 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளிடமிருந்து ரூ.2.57 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.