தலைமைச் செயலகத்தில் இன்று கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் அரசின் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் வேலுமணி அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், சுயஉதவிக் குழுக்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் சிறப்பு கடனுதவி, இளைஞர்கள் சுய தொழில் தொடங்க வங்கிகளில் கடனுதவி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
தெருவோர வியாபாரிகளுக்கு முத்ரா திட்டத்தில் கடன் பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து சுயஉதவிக் குழுக்களுக்கும், சுழல் நிதியாக ரூ.10,000 மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு சுழல் நிதியாக ரூ.50,000 வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறினார். இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம், 82 லட்சம் முகக்கவசங்களை உற்பத்தி செய்து, குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளையும் செயல்படுத்த அலுவலர்கள் திட்டம் வகுத்து விரைவாகவும், துரிதமாகவும் முடித்திட வேண்டும் எனவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டு தெரிவித்த ஐ.சி.எம்.ஆர். மருத்துவர்கள்!