திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அயனாவரத்தில், மாநகராட்சியின் முதல் நிலைப் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர், சித்தா மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள சூழலில், கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளதாகவும், சவாலான நேரத்தில் பொதுப்பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்வோர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிய நாடுகளில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தமிழ்நாட்டிலும் அரசின் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் 100 சதவிகிதம் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.