சென்னை:தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 40 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று (செப்.12) நடைபெற்றது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களிலுள்ள முகாம்களை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மதுரையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “ஒரே நாளில் 40 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தி மிகப்பெரிய அளவிலான சாதனையாக 28 லட்சத்து 36 ஆயிரத்து 776 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
தினந்தோறும் 7 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடுகின்ற அளவுக்கு நிர்வாக கட்டமைப்பு உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் கூறினார். ஆனால் இன்றைக்கு 3 மடங்காக மாறி ஒரு நாளைக்கு 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் அளவிற்கு நிர்வாக கட்டமைப்பு உள்ளது.
கூடுதல் தடுப்பூசி தர வேண்டுகோள்
தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 3லட்சத்து 13 ஆயிரத்து 112 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 6 கோடி பேருக்குத் தடுப்பூசி போட வேண்டும். ஆனால், தற்போது 66 விழுக்காட்டிற்கும் மேலாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு அறிவிக்க உள்ளோம். மேலும் வாரம் ஒருமுறை இதுபோன்ற மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு கூடுதல் தடுப்பூசிகளை தர வேண்டுமென ஒன்றிய சுகாதார துறை அமைச்சரிடம் தொலைபேசி மூலமாக கேட்டுள்ளோம்.
இது நிச்சயம் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு இடங்களில் பிற்பகலுக்கு பிறகு தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து தொலைபேசி மூலமாக தெரிவித்தனர்.